விவசாயிகளிடமிருந்து மேலும் நெல் கொள்வனவு செய்ய அரசு திட்டம்
நெல் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 115,000 மெட்ரிக் டொன் நெல் தற்போது சபையின் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சிறுபோக பருவத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான களஞ்சிய வசதிகளையும் நிதியையும் உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த நெல் இருப்பின் ஒரு பகுதியை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, தேவையான பாதுகாப்பு இருப்பை மாத்திரம் களஞ்சியங்களில் வைத்துக்கொண்டு, ஏனைய நெல் இருப்புகளை சந்தைக்கு விடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நெல் இருப்புகளை முறையான விலை மனு கோரல் நடைமுறையின் கீழ் விற்பனை செய்வதற்காக, விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் எதிர்கால நெல் கொள்வனவுகளுக்கான சேமிப்பு வசதிகளை ஏற்படுத்துவதுடன், விவசாயிகளிடமிருந்து தொடர்ச்சியாக நெல் கொள்வனவு செய்ய தேவையான நிதி நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது.