கேரள கடற்பரப்பில் விடுதலைப் புலிகள்! திணறும் இந்திய தேசிய புலனாய்வு பிரிவு
கேரள கடற்பரப்பில் இலங்கை படகொன்றில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் 3 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியுடைய ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு தொடர்பு உள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஐந்து AK47 துப்பாக்கிகள் மற்றும் 3 ஆயிரம் கோடி ரூபா மதிப்புள்ள ஹெராயினுடன் சென்னையில் வசிக்கும் இரண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
மார்ச் மாதம் 25 ஆம் திகதி கேரளா கடற்கரையில் இலங்கை படகொன்றில் இருந்து ஐந்து AK47 துப்பாக்கிகள் மற்றும் 3 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியுடைய ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த சம்பவத்துடன் சென்னையில் வசிக்கும் இரண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு தொடர்பு உள்ளதாக இந்திய நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.
அதன்பிரகாரம் சின்ன சுரேஷ் என்று அழைக்கப்படும் சுரேஷ் ராஜ் மற்றும் சவுந்தர் என்று அழைக்கப்படும் சவுந்தர் ராஜனிடம் தமிழ் நாடு கியூ பிரிவு ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்தது.
பின்னர் குறித்த இருவரும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய , கொச்சி நகருக்கு அழைக்கப்பட்டு இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் குறித்த இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் உட்பட வெளிநாட்டு போதை பொருள் விநியோகஸ்தர்களுடன் தொடர்பை பேணி வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பாகிஸ்தான் பிரஜை அதிக அளவிலான ஹெரோயின், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், 2020 ஆம் ஆண்டில் மீன்பிடி கப்பல்களைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்த பட்டுள்ளதாகவும் இந்திய தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சுரேஷ் என்பவர் இலங்கையை சேர்ந்தவர் எனவும் குறித்த நபர் விடுதலை புலிகளுடன் தொடர்புகளை பேணி வந்தவர் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனிடையே குறித்த நபர் கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் விசா மற்றும் கடவுச்சீட்டு இன்றி சட்டவிரோதமானமுறையில் தங்கியுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இரண்டாம் இணைப்பு
சென்னை வளசரவாக்கத்தில் இலங்கை தமிழர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இலங்கை தமிழர் சபேசன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில், முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் கேரளா விழிஞ்சம் கடற்பகுதியில் 300 கிலோ ஹெராயின், ஏகே 47 துப்பாக்கி மற்றும் 1,000 தோட்டாக்களுடன் படகு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக தேசிய பாதுகாப்பு முகமை கடந்த மே மாதம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இந்த மாதம் மேலும் 2 பேரை கைது செய்தது.
மேலும், சென்னை, திருவள்ளூர், எர்ணாகுளம் உள்ளிட்ட 7 இடங்களில் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனை முடிவில் விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள் மொபைல் போன் சிம் கார்டுகள், உள்ளிட்ட 7 டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.