சிம்பாப்வேயை 9 விக்கெட்டுக்களால் வீழ்த்திய இலங்கை
பாகிஸ்தான், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் ராவல்பிண்டி மைதானத்தில் இன்று (25) நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் 5-வது போட்டியில், இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
பெத்தும் நிசங்கவின் அதிரடி ஆட்டம் 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிசங்க மிகச் சிறப்பான ஆரம்பத்தை வழங்கினார்.
சிம்பாப்வே பந்துவீச்சாளர்களைத் திணறடித்த அவர், அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 98 ஓட்டங்களைப் குவித்தார்.

துரதிர்ஷ்டவசமாகச் சதம் அடிக்கும் வாய்ப்பை 2 ஓட்டங்களால் தவறவிட்ட போதிலும், அணியின் வெற்றிக்கு அவர் அடித்தளமிட்டார்.
அவருக்குத் துணையாகச் செயற்பட்ட குசல் மெந்திஸ், நிதானமாக விளையாடி 25 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதன் மூலம் இலங்கை அணி 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை இலகுவாக அடைந்தது.
முன்னதாக, நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.
சிம்பாப்வே அணி சார்பில் ரியான் பர்ல் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் மற்றும் அணித்தலைவர் சிக்கந்தர் ராசா 37 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பிரையன் பென்னட் 34 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் சிறப்பாகச் செயற்பட்ட மஹீஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.