நீதிமன்றம் செல்லும் வழியில் ஞானசார தேரர் திடீர் மயக்கம்!
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் திடீரென மயக்கமடைந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மஹரகம அபேக்ஷா மருத்துவமனைக்கு சென்று நோய்வாய்ப்பட்டிருந்த மற்றுமொரு தேரரை பார்வையிட்ட பின்னர் நீதிமன்றத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது, புதுக்கடை நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள பெரேரா அன்ட் சன்ஸ் உணவகத்தில் உணவருந்திக்கொண்டிருந்தபோது அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உணவருந்திக்கொண்டிருந்தபோது மயக்கம்
இதன் காரணமாக ஞானசார தேரரால் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை. அவருடன் இருந்த விஹாரகல விஜித்த தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2016ஆம் ஆண்டு கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இஸ்லாம் மதம் தொடர்பில் வெளியிட்ட கருத்துகள் மூலம் மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகக் கூறி ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
குறித்த வழக்கில் அவருக்கு 9 மாத கடூழியச் சிறைத்தண்டனையும் 1,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
அந்த வழக்கு 2027ஆம் ஆண்டு பெப்ரவரி 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், தற்போதைய வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.