யாழ் போதனாவில் சிறுமியின் கை அகற்றப்பட்ட வழக்கு; நீதிமன்றம் கண்டனம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், காலத்தை இழுத்தடித்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் பொலிஸாரின் போக்கை நீதிமன்றம் கண்டித்துளது.
அதோடு , குறுகிய காலத்தில் இறுதி அறிக்கையை வழங்க வேண்டும் என பொலிஸாருக்குக் கட்டளையிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சாண்டில்யன் வைஷாலி என்ற சிறுமி காய்ச்சல் மற்றும் தோலில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

மருத்துவத் தவறு நேர்ந்ததாக சிறுமியின் பெற்றோர் குற்றம்
அவருக்கு மணிக்கட்டில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாள்களில் மணிக்கட்டு வீக்கமடைந்து பின்னர் அந்தப் பகுதி வெட்டி அகற்றப்பட்டது. இந்த விடயத்தில் மருத்துவத் தவறு நேர்ந்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் குற்றம் சுமத்தி நீதி கோரியிருந்தனர்.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில், மேலதிக நீதவான் நஜ்மி ஹுசைன் முன்னிலையில் நேற்று (3) விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் கடந்த தவணையில், “இந்த வழக்குத் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையொன்றை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ளோம். எனவே அவரின் ஆலோசனையைப் பெறுவதற்கான நீண்ட கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கவேண்டும்” என்று பொலிஸார் நீதிமன்றில் கோரியிருந்தனர்.
ஏற்கனவே இந்த வழக்கு இரண்டு வருடங்கள் கடந்து விட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, நீண்டதவணையை வழங்க மறுத்து , சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்கான கால அவகாசத்தின் பொருட்டு நேற்றுவரை வழக்கை நீதிவான் தவணையிட்டார்.
வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, வழக்குத் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை இதுவரை சட்டமா அதிபருக்கு அனுப்பப்படவில்லை என்றும், கொழும்பில் உள்ள பொலிஸ் சட்டக்கல்லூரி ஊடாக இன்மேல்தான் சட்டமா அதிபருக்கு விசாரணை அறிக்கை அனுப்பப்படவுள்ளது என்றும் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி சார்பாக மன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி எஸ்.கே.புரந்தரன், மன்றைப் பொலிஸார் தவறாக வழிநடத்துகின்றனர் எனவு, வழக்கை காலந்தாழ்த்திக் கொண்டு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது எனவும் கோரினார்.
கடந்த வழக்குத் தவணையில் முழுமையான விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று கூறி நீண்ட தவணை கோரிய பொலிஸார், தற்போது விசாரணை அறிக்கை இன்னமும் அனுப்பப்படவில்லை எனக் குறிப்பிடுவதையும் சுட்டிக்காட்டினார்.
சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்கு நீதிமன்றம் ஒரு கால எல்லையைப் பொலிஸாருக்கு வழங்க வேண்டும் எனவும் சட்டத்தரணி எஸ்.கே.புரந்தரன் கோரிக்கை முன்வைத்தார்.