பலாப்பழம் மூக்கின் மீது தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
மரத்திலிருந்து விழுந்த பலாப்பழம் ஒன்று மூக்கின் மீது தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, மூன்று குழந்தைகளின் தந்தை உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் கண்டி தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலத்த காற்றில் விழுந்த பலாப்பழம்
சம்பவத்தில் , கேகாலை வத்துரடிகேன பகுதியைச் சேர்ந்த 56 வயதானவர் என கூறப்படுகின்றது. இவரது மனைவி கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் நண்பரின் வீட்டிற்கு கடந்த 25-ஆம் திகதி சென்று நண்பர்களுடன் இருந்த வேளை திடீரெனப் பலத்த காற்று வீசியது. இதன்போது, பலா மரத்திலிருந்து விழுந்த பலாப்பழம் ஒன்று, முதலில் ஒரு பாறையின் மீது மோதிவிட்டு, பின்னர் நேராக அவரது மூக்கின் மீது வந்து விழுந்தது.
அந்தத் தாக்கத்தினால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், அவரது தலையின் பின்பகுதி ஒரு பாறையின் மீது பலமாக மோதியதில் குறித்த நபர் படுகாயங்களுக்குள்ளானார்.
இதையடுத்து, கேகாலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிற்சைக்காக கண்டி தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.