அரச நிறுவனங்களில் இனி உங்கள் மொழிகளிலே சேவையை பெறலாம் மக்களே !
எந்தவொரு குடிமகனும் தமிழ் அல்லது சிங்கள மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் இருந்து சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இத்தகவலை பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் அனுராதா விஜேகோன் தெரிவித்துள்ளார்.
அரச கரும மொழிகளாக சிங்களம் மற்றும் தமிழ்
அரச கரும மொழிக்கொள்கையை அமுல்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அரசியலமைப்பில் அரச கரும மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஒரு குடிமகன் இந்த நாட்டில் உள்ள அரசாங்க நிறுவனத்தில் சேவையைப் பெறும்போது, நபர் ஒருவர் தனக்கு தேவையான சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் கோரலாம்.
அதற்கான உரிமை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டும் தேசிய மொழிகளாகக் கருதப்படுவதாகவும், ஒரு நாடு என்ற வகையில் அரச துறையில் மட்டுமன்றி வேறு எந்தப் பணியிலும் சிங்களம் மற்றும் தமிழ் இரண்டும் பிரதான மொழிகளாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் அரச கரும மொழிப் பாடத்தை கையாள்வதற்கான தனியான பிரிவு ஒன்று இருப்பதாகவும் அனுராதா விஜேகோன் சுட்டிக்காட்டினார்.
மேலும் , நாட்டின் அரச கரும மொழிக் கொள்கையை அரசியலமைப்பில் உள்ளடக்கி அதற்கு அதி முக்கியத்துவம் வழங்குவதற்கு அரசியலமைப்பிலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.