ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு ; காரணத்தை விளக்கும் ரணில்
கலகொடஅத்தே ஞானசார தேரர் சிறையிலடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பௌத்த மத மற்றும் பௌத்த ஒழுக்கக் விதிகள் தொடர்பான சிக்கலொன்று உருவெடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் வெடிப்புச் சத்தம்; பயணிகள் அவசர வெளியேற்றம் ; விமானச் சேவைகள் பாதிப்பு
கொழும்பு - ப்ளவர் வீதியிலுள்ள தமது அரசியல் அலுவலகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகளுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், "ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து, அப்போதைய நீதவான் ரங்க திஸாநாயக்கவின் அறிவித்தலுக்கு அமைவாகவே ஞானசார தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்தது.

எனினும், அன்று அவர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது அவரது காவி உடை களையப்படவில்லை.
இது தொடர்பாக அப்போதைய நீதி அமைச்சர் தலதா அத்துகோரள, கொடபிட்டியே ராகுல தேரருக்கு அனுப்பிய கடிதத்தில் காவி உடை களையப்பட மாட்டாது என உறுதியளிக்கப்பட்டிருந்தது.
ஒரு வருடத்தின் பின்னர் பௌத்த பிக்குகள் சிலர் என்னைச் சந்தித்துப் பேசுகையில், குற்றவியல் வழக்குகளில் பௌத்த விதிகளின்படி 'பாராஜிகா' (மன்னிக்க முடியாத 4 பெருங் குற்றங்கள்)) நிலையை அடைந்தால் மட்டுமே காவி உடையை அகற்ற முடியும் எனக் சுட்டிக்காட்டினர்.
நீதிமன்றத்தை அவமதித்தமை 'பாராஜிகா' குற்றமாகாது என்றும், மத விதிகளின்படி பிக்குகளை அழைத்து எச்சரித்து அல்லது தியானப் பயிற்சிகளுக்கு அனுப்ப மட்டுமே விதிகளில் இடமுள்ளது என்றும் தெரிவித்தனர்.
அத்துடன், 'பாராஜிகா' அல்லாத ஒரு விடயத்திற்காகக் காவி உடையை அகற்றுவது அரசியலமைப்பின் 9 ஆவது பிரிவுக்கு முரணானது என்பதையும் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இது குறித்துப் பேசுமாறு நான் அவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.

ஒரு வருட சிறைத்தண்டனை கழிந்த பின்னர், தேரரின் காவி உடையை அகற்றிச் சிறையில் வைத்திருப்பதா அல்லது பொதுமன்னிப்பு வழங்கி விடுவிப்பதா என்பது குறித்து அமைச்சரவையிலும் பேசப்பட்டது.
அக்காலகட்டத்தில் அப்போதைய பிரதமராக நான் உட்பட ஏனைய அமைச்சர்கள் இணைந்து, அரசியலமைப்பின் 9 ஆவது பிரிவின் கீழ் அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கத் தீர்மானித்தோம்.
காவி உடையைக் களைந்திருந்தால் அது மிகப்பெரிய மதப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும்.
இந்தியாவில் பிரதம நீதியரசரை 'தலித்' என சாதி ரீதியாக இழிவுபடுத்திச் செருப்பால் அடித்த சம்பவத்தில் கூட எச்சரிக்கை செய்யப்பட்டு அல்லது குறுகிய காலப் பகுதியிலேயே விடுவிக்கப்பட்ட சம்பவங்கள் உண்டு.
எனவே, ஞானசார தேரரின் விடயத்தில் தண்டனை வழங்கப்பட்ட பின்னர் உருவானது பௌத்த மத மற்றும் ஒழுக்க ரீதியான பிரச்சினையாகும்.
இங்குப் பௌத்த பிக்குகளின் பெரும்பான்மையான கருத்துக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இவ்வாறான மத ரீதியான விவகாரத்தில் மாற்று அமைப்புகள் (CPA போன்றவை) தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என அவர் மேலும் குறிப்பிட்டார்.