மாணவன் தலையில் தபேலா வாசித்த ஆசிரியர் பணி நீக்கம்!
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், எட்டாவா பகுதியில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில், மாணவன் தலையில் தபேலா வாசிப்பதைப் போன்று நடந்துகொண்ட ஆசிரியர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆசிரியர் மாணவனின் தலையில் தட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த காணொளியை ஆசிரியர் தனது பேஸ்புக் கணக்கில் பதிவேற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தக் காணொளியில், ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்திருக்க, மாணவன் ஒருவர் அவருக்கு முன்னால் தரையில் அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. இதன்போது, தபேலா வாசிப்பதைப் போன்று மாணவனின் தலையில் ஆசிரியர் மீண்டும் மீண்டும் தட்டுவதுடன், சத்தமாகச் சிரிக்கிறார்.
அருகில் அமர்ந்திருந்த ஏனைய மாணவர்களும் இதனைப் பார்த்துச் சிரிப்பதைக் காண முடிகிறது. காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, இது தொடர்பில் இந்தியாவின் அடிப்படைக் கல்வித் திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து, ஆசிரியரின் செயற்பாடு ஒழுக்கமற்ற நடவடிக்கையாகக் கருதப்பட்டு, உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.