பொன்னி சம்பா (GR 11) இறக்குமதிக்கான வர்த்தமானி வௌியானது
கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசியை (GR 11) இறக்குமதி செய்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் கடந்த 15 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்
இதன்படி இறக்குமதியாளர் ஒருவருக்கு அதிகபட்சம் 52 மெற்றிக் டன் அரிசியே இறக்குமதி செய்ய முடியும்.
அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசியை எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இலங்கை சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் வௌிப்படுத்தப்பட்டுள்ளது.
கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசியை (GR 11) இறக்குமதி செய்ய அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியது.
உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமங்களைப் பெறுவதற்கான தேவையிலிருந்து பொன்னி சம்பா அரிசியை விலக்கு அளிக்க வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாடு ஆகிய அமைச்சர்கள் கூட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை குறித்த அனுமதியை அண்மையில் அளித்திருந்தது.
இதற்கமைய 2025-10-15 முதல் 2025-11-15 வரை பொன்னி சம்பா அரிசி (GR 11) இறக்குமதி செய்யப்படவுள்ளது. சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு நிலவும் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக இவ்வாறு பொன்னி சம்பா அரிசி (GR 11) இறக்குமதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.