பொலிஸ் உடையில் கொள்ளையடிக்க வந்த கும்பல் ; பெண் உள்ளிட்ட பலர் கைது
கல்னேவ பகுதியில் உள்ள ஒரு இளம் தொழிலதிபரின் வீட்டை கொள்ளையடிக்க முயன்ற ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நான்கு பேரை கல்னேவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜூன் 25 ஆம் திகதி இரவு, சந்தேக நபர்கள் வெள்ளை வேனில் வந்து, ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் என்று வேடமிட்டு, பொலிஸாரின் சீருடைகளை ஒத்த சீருடைகளை அணிந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
சுற்றி வளைத்த ஊரவர்கள்
வீட்டில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வீட்டை ஆய்வு செய்ய வந்ததாகவும் கூறி தொழிலதிபரை கைவிலங்கிட்டு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர்.
சந்தேக நபர்கள் வந்த வேன் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்ததுடன் குறித்த வேனை ஊரவர்கள் சந்தேகத்தின் பேரில் சுற்றி வளைத்துள்ளனர்.
இதன் போது குறித்த சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கல்னேவ பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, சந்தேக நபர்கள் வந்த வேனுடன் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.