இலங்கையை நோக்கி புதிய காற்றுச் சுழற்சி ; யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளரின் அதிர்ச்சி தகவல்
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் உருவாகியிருந்த காற்றுச் சுழற்சி தற்போது மாலைதீவுகளுக்கு அருகில் நிலை கொண்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கு தற்போது கிடைத்து வரும் மழை, நாளை (22.12.2025) இரவு முதல் படிப்படியாக குறைவடையும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, எதிர்வரும் 28.12.2025 அன்று வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் சாத்தியம் காணப்படுகின்றது.
இதன் தாக்கத்தால், 28.12.2025 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மழை நிலை 07.01.2026 வரை தொடரக்கூடும் எனவும், இடைப்பட்ட சில நாட்களில் மழையற்ற காலப்பகுதிகளும் காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 31.12.2025 முதல் மத்திய, ஊவா, வடமத்திய, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இம்மாகாணங்களுக்கும் 07.01.2026 வரை மழை கிடைக்கும் சாத்தியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 10.01.2026 முதல் 13.01.2026 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.
வானிலை முன்னறிவிப்புகளின்படி, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பெரும்பாலான நாட்கள் மழை நாட்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவி வரும் குளிரான வானிலை 26.12.2025 முதல் படிப்படியாக குறைவடையும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விவசாயிகள் இந்த வானிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு தமது விவசாய நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
இது ஒரு நீண்டகால வானிலை முன்னறிவிப்பு என்பதனால், இதில் காலப்போக்கில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.