வாடகைக்கு வாகனத்தை பெற்று அரங்கேறிய மோசடி ; பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு
வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிறுவனம் ஒன்றிடமிருந்து பெறப்பட்ட கெப் ரக வாகனத்திற்கு போலி ஆவணங்களைத் தயாரித்து, அதனை 50 இலட்சம் ரூபாய்க்கு அடகு வைத்ததாகக் கூறப்படும் நபரை எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை பிரதான நீதிவான் இன்று (19) உத்தரவிட்டார்.
பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்ற விசாரணை
மொரகஹஹேன பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய, மொரகஹஹேன பொலிஸாரும் ஹொரணை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரும் இணைந்து கடந்த 18 ஆம் திகதி சந்தேக நபரைக் கைது செய்திருந்தனர்.
சந்தேக நபர் கல்கிஸை பிரதேசத்தில் உள்ள வாகன வாடகை நிறுவனமொன்றில் இருந்து இந்த கெப் ரக வாகனத்தைப் பெற்றுள்ளார். பின்னர் அதன் பதிவுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைத் தனது பெயருக்குப் போலியாகத் தயாரித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, முறைப்பாட்டாளரான மொரகஹஹேன பிரதேசவாசியிடம் 50 இலட்சம் ரூபாய்க்கு அந்த வாகனத்தை அடகு வைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஒரே வீட்டில் 6 ஆண்டுகளாக குடித்தனம் ; இறுதியில் திருநங்கைக்கு காதலன் நடத்திய பயங்கரம், வெளியான பகீர் பின்னணி
குறித்த வாகனம் போலி ஆவணங்களைக் கொண்டது என்பதை அடையாளம் கண்டுகொண்ட முறைப்பாட்டாளர், இது தொடர்பாக கடந்த ஆண்டு காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதன்படி மேற்கொள்ளப்பட்ட நீண்டகால விசாரணையில், இந்த வாகனம் அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது என்பதும், அவர் அதனை கல்கிஸையில் உள்ள வாடகை நிறுவனத்திற்கு வழங்கியிருந்ததும் தெரியவந்தது.
இந்த மோசடியைச் செய்த பின்னர் சந்தேக நபர் நீண்டகாலமாகத் தலைமறைவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.