அக்மீமன முன்னாள் பிரதேச சபை முதல்வருக்கு 3 ஆண்டுகள் சிறை
அக்மீமன பிரதேச சபையின் முன்னாள் முதல்வர் மிலிந்த ஹபுதந்திரிக்கு மூன்று ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கையூட்டல் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட நிலையில் முன்னாள் பிரதேச சபை முதல்வருக்கு 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) இதனைத் தெரிவித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரசந்த கொடவெலவினால் கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிகளவில் செலவுகளை மேற்கொண்டமை
மிலிந்த ஹபுதந்திரி, அக்மீமன பிரதேச சபையின் முதல்வர் மற்றும் உப தலைவர் ஆகிய பதவிகளை வகித்த காலப்பகுதியில், அதாவது 2011 மார்ச் 31ஆம் திகதி முதல் 2013 பெப்ரவரி 28ஆம் திகதி வரையான 23 மாதங்களில், அவரது சட்டபூர்வ வருமானத்தை விட அதிகளவில் செலவுகளை மேற்கொண்டமை தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குறித்த காலப்பகுதியில் ஈட்டிய சட்டபூர்வ வருமானத்தை விட அதிகமான சொத்துகள் அல்லது பணத்தை அவர் சட்டவிரோதமாகப் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
வழக்கு விசாரணையின் நிறைவில், அவருக்கு மூன்று ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 5,000 ரூபாய் அபராதமும் 7.5 மில்லியன் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளன.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மூன்று மாதங்கள் மேலதிக சிறைத்தண்டனையும், 7.5 மில்லியன் ரூபாய் தண்டப்பணத்தைச் செலுத்தத் தவறினால் 24 மாதங்கள் மேலதிக சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.