Flydubai இந்திய விமானிக்கு இஸ்ரேலின் ஜனாதிபதி விருது!
துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்த வானூர்தியில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலின்போது துணிச்சலுடனும் தொழில்முறை திறனுடனும் செயற்பட்ட இந்திய விமானி கெப்டன் ஸ்மித் மச்சாருக்கு (Captain Smit Machhar) ஜனாதிபதி விருது வழங்கப்படவுள்ளதாக இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அறிவித்துள்ளார்.
Flydubai நிறுவனத்துக்குச் சொந்தமான FZ1073 வானூர்தியில் ஏற்பட்ட அவசர நிலைமையின்போது, வானூர்திப் பணியாளர்களுக்கு உதவி செய்து தாக்குதல்தாரியைக் கட்டுப்படுத்திய இஸ்ரேலியப் பயணிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு ஜெருசலேமில் நடைபெற்றது.

இஸ்ரேல் ஜனாதிபதி அறிவிப்பு
இதன்போதே இஸ்ரேல் ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்திய விமானியின் துணிச்சலும் தொழில்முறைத் திறனும் அசாம்பாவிதம் ஒன்றைத் தவிர்க்க உதவியதாக ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார்.
விமானி முழுமையாகக் குணமடைந்த பின்னர், இஸ்ரேல் மக்களின் சார்பில் அவருக்கு குடிமக்கள் வீரத்திற்கான ஜனாதிபதி விருதை நேரில் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்த FZ1073 வானூர்தியில் 174 பயணிகள் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் இஸ்ரேலியப் பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வானூர்தியில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலின்போது விமானியின் செயற்பாடு பாராட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது