தாயின் உயிரைக் காக்கக் கைகொடுத்த வெளிநாட்டுப் பெண் ; நெகிழ வைத்த மனிதநேயச் சம்பவம்
இலங்கையில் வழிதவறி நின்ற பிரித்தானியப் பெண் ஒருவருக்கு எவ்விதப் பிரதிபலனையும் எதிர்பாராமல் உதவிய இலங்கை இளைஞர் ஒருவருக்கு, ஐந்து மாதங்களுக்குப் பின்னர் அவரது தாயின் அறுவை சிகிச்சைக்காக அதே பெண் உதவிக்கரம் நீட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய மலைநாட்டின் தேயிலைத் தோட்டங்களுக்கு இடையிலுள்ள கிராமமொன்றில் வசிக்கும் சமன் என்ற இளைஞரே இச்சம்பவத்தின் கதாநாயகனாவார்.
தந்தையின் திடீர் மறைவுக்குப் பின்னர் குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட சமன், நோய்வாய்ப்பட்டிருந்த தாயின் மருத்துவச் செலவுகள் மற்றும் தங்கையின் கல்விச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக நகருக்கு அருகில் சிறிய தேநீர்க் கடையொன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், ஒருநாள் இரவு சுமார் 9 மணியளவில் தேநீர்க் கடையை மூடிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, வீதியோரத்திலுள்ள மரமொன்றின் கீழ் மழையில் நனைந்து நடுங்கிக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண்ணொருவரைக் கண்டுள்ளார்.
திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த எமா என்ற பிரித்தானியப் பெண், அவர் பயணித்த பேருந்து தொழில்நுட்பக் கோளாறால் இடைநடுவில் நின்றதையடுத்து வேறு வாகனத்தைத் தேடிச் சென்றபோது வழிதவறி அந்தக் கிராமத்தை வந்தடைந்துள்ளார்.
அத்துடன், அவரது கையடக்கத் தொலைபேசியின் மின்கலமும் தீர்ந்துபோயிருந்ததால், தொடர்புகொள்ள முடியாத நிலையில் அவர் தவித்துள்ளார்.
ஆங்கில மொழியில் போதிய புலமை இல்லாதபோதிலும், அவரது நிலையைப் புரிந்துகொண்ட சமன், தனது குடையின் கீழ் அவரைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சமனின் தாயார், எமாவை அன்புடன் வரவேற்று உலர் ஆடைகள், சூடான தேநீர் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை வழங்கி உபசரித்துள்ளார்.
மறுநாள் அதிகாலை சமன், எமாவை நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொழும்பு நோக்கிச் செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டுள்ளார்.
இதன்போது, எமா பணம் வழங்க முயன்றபோதிலும், இலங்கைக்கு வந்த விருந்தாளிக்கு உதவியதற்காகப் பணம் தேவையில்லை எனக் கூறி சமன் அதனை மறுத்துள்ளார்.

எனினும், தனது பெயர், தொலைபேசி இலக்கம் மற்றும் முகவரியை எழுதி எமா அவரிடம் வழங்கிச் சென்றுள்ளார். இதற்கிடையில், சுமார் ஐந்து மாதங்களுக்குப் பின்னர் சமனின் தாயாரின் உடல்நிலை மோசமடைந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்த போதிலும், அதற்கான செலவுகளைச் சமாளிக்க முடியாமல் சமன் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஒருநாள் பிற்பகல் சுமார் 3 மணியளவில் சமன் வைத்தியசாலையில் இருந்தபோது, பிரித்தானியப் பெண்ணான எமா திடீரென அங்கு வருகை தந்துள்ளார்.
ஐக்கிய இராச்சியத்திற்குத் திரும்பிய பின்னர் 'இலங்கை விருந்தோம்பல் மற்றும் மனிதாபிமானம்' என்ற பெயரில் சிறிய சமூக சேவை நிதியமொன்றை ஆரம்பித்திருந்த எமா, இலங்கைத் தூதரகம் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் ஊடாக சமனின் விவரங்களைத் தேடிக் கண்டறிந்துள்ளார்.
இதனையடுத்து, சமனின் தாயாரின் அறுவை சிகிச்சை மற்றும் வைத்தியசாலைக் கட்டணங்களுக்குத் தேவையான முழுத் தொகையையும் அவர் வழங்கியுள்ளார்.
அத்துடன், சமன் சுயதொழில் ஒன்றை ஆரம்பித்து வருமானம் ஈட்டுவதற்காக தேயிலை நாற்றுகள் மற்றும் மரக்கறிச் செய்கைக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் நிதி உதவிகளையும் வழங்கியுள்ளார்.
தனக்கு இலங்கையில் கிடைத்த மனிதாபிமான உதவியை மறக்காமல், அதற்குப் பதிலாக உதவிக்கரம் நீட்டியுள்ளதாக எமா உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
எவ்விதப் பிரதிபலனையும் எதிர்பாராமல் செய்யப்படும் சிறிய உதவிகூட ஒருநாள் பெரும் நன்மையாகத் திரும்பக் கிடைக்கலாம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.