நடுவானில் பயங்கரம் ; இந்திய விமானியை கத்தியால் குத்தி விமானத்தை வீழ்த்த முயன்ற துணை விமானி
33 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய விமானியை கத்தியால் குத்தி சக விமானி விமான தகர்ப்பில் ஈடுபட முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
டுபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிப் பயணித்த ஃப்ளைடுபாய் விமானத்தில் விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து, விமானம் சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃப்ளைடுபாய் நிறுவனத்தின் FZ1073 விமானம் புதன்கிழமை டுபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்டது. இதில் சுமார் 170 பயணிகள் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விமானம் புறப்பட்டு சுமார் இரண்டரை மணி நேரத்துக்குப் பின்னர், ஜோர்தான் வான்பரப்பிற்கு அருகில் சுமார் 33,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, காக்பிட்டில் இரு விமானிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலின்போது இந்தியாவைச் சேர்ந்த தலைமை விமானி ஸ்மித் மச்சார் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கத்தி தொடர்பான விவரங்களும் விசாரணையில் இடம்பெற்றுள்ளன.
சம்பவத்திற்கான காரணம் மற்றும் நோக்கம் இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தப்படவில்லை. இதனிடையே, விமானம் சுமார் 33,000 அடியிலிருந்து 17,000 அடி உயரத்திற்கு மிகக் குறுகிய நேரத்தில் திடீரென இறங்கியதாக விமானப் போக்குவரத்து கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.
இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் மத்தியில் பெரும் அச்சநிலை ஏற்பட்டது. சம்பவத்தையடுத்து விமானத்திலிருந்து அவசர எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பப்பட்டதுடன், 7500 என்ற சட்டவிரோத தலையீடு அல்லது விமானக் கடத்தல் தொடர்பான அவசர குறியீடும் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் விமானம் தொடர்பில் பாதுகாப்பு அச்சம் ஏற்பட்ட நிலையில், இஸ்ரேல் தனது போர் விமானங்களை அவசரமாக அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்திற்குள் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தியதையடுத்து, விமானத்தை பாதுகாப்பாக இயக்க முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த தலைமை விமானியும் சம்பவத்தை கட்டுப்படுத்துவதில் உதவியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து விமானம் சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தின் தலைமை விமானியும் துணை விமானியும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக தபூக் விமான நிலையம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் ஒருவரை சவூதி அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃப்ளைடுபாய் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விமானத்தின் காக்பிட்டில் மோதல் ஏற்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், விமானக் குழுவினர் நிலைமையை கட்டுப்படுத்தி விமானத்தை தபூக்கிற்கு திருப்பி பாதுகாப்பாக தரையிறக்கியதாக தெரிவித்துள்ளது.
அதேவேளை, சம்பவத்திற்கான காரணம் மற்றும் நோக்கம் தொடர்பில் அதிகாரப்பூர்வ விசாரணை நடைபெற்று வருவதாகவும், முன்கூட்டியே முடிவுகளுக்கு வர வேண்டாம் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் சவூதி அரேபியா மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விமானம் திடீரென உயரம் குறைத்ததற்கான காரணம், காக்பிட்டில் ஏற்பட்ட மோதலின் முழுமையான பின்னணி மற்றும் விமானத்தை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்க முயற்சி இடம்பெற்றதா என்பவை விசாரணையின் முக்கிய அம்சங்களாக உள்ளன.