கொழும்பு துறைமுக போதைப்பொருள் விவகாரம் ; பொலிஸ் அதிகாரிகள் கடமை தவறியதாக விசாரணையில் தகவல்
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் போதைப்பொருள் இருப்பதாகக் கிடைத்த தகவல் தொடர்பில் நடவடிக்கை எடுத்தபோது, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் கடமை தவறியமை தெரியவந்துள்ளது.
பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் நடத்திய விசாரணையின் போதே இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி கொழும்பு துறைமுகக் கொள்கலன் ஒன்றிலிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் உள்ளக விசாரணையொன்று நடத்தப்பட்டது.

சட்டவிரோத போதைப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ஒகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவிற்குத் தகவல் கிடைத்திருப்பது இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்தகவலை அன்றைய தினமே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும், ஒகஸ்ட் மாதம் 22ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஏகநாயக்கவுக்கும் இத்தகவல் கிடைத்துள்ளதுடன், அவர் இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒகஸ்ட் 31ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று சுங்க அதிகாரிகளுடன் இணைந்து கொள்கலனைத் திறந்து போதைப்பொருளைக் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளும் அங்கு வருகை தந்துள்ளதுடன், முதன்மையாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினாலேயே இப்போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்படி, குறித்த தகவல் தொடர்பில் நடவடிக்கை எடுத்தபோது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு உள்ளிட்ட அதிகாரிகள் கடமை தவறியுள்ளதுடன், அலட்சியமாகச் செயற்பட்டுள்ளமை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.
எனவே, இந்த விசாரணைக்கு மேலதிகமாக இது தொடர்பில் குற்றவியல் விசாரணையொன்றை மேற்கொள்வது பொருத்தமானது என பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு அறிக்கையளித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவிற்கு கிடைத்த தகவல் தொடர்பில் நடவடிக்கை எடுத்தபோது வெளிப்பட்ட கடமை தவறுதல் மற்றும் அலட்சியப் போக்கு என்பன ஏதேனும் தரப்பினருக்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக இடம்பெற்றதா என்பது குறித்துக் கண்டறியுமாறு பொலிஸ் மா அதிபரினால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகக் குற்றவியல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய முடியுமா என்பது உறுதிப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.