யாழ் வங்கியில் நிலையான வைப்பிலிடப்பட்ட பணம் மாயம்; புலம்பெயர் தமிழர் அதிர்ச்சி!
யாழ்ப்பாணத்தில், வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வங்கி முகாமையாளர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஒருவர், நீண்ட காலத்திற்கு நிலையான வைப்பில் பெருந்தொகை பணத்தினை வைப்பிலிட்ட பின்னர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.
பணத்தை எடுக்க சென்றவருக்கு அதிர்ச்சி
இதனையடுத்து குறித்த நபர் திடீரென நாடு திரும்பி தனது நிலையான வைப்பில் உள்ள பணத்தினை மீள பெற வங்கிக்கு சென்றுள்ளார்.
இதன்போது தனது பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதை அறிந்த அவர் அதிர்ச்சியடைத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அவரது முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வங்கியின் முகாமையாளரை கைது செய்தனர்.
வங்கியின் முகாமையாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.