இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எச்சரிக்கை
ஈரானைச் சுற்றியுள்ள பிராந்திய மோதல்கள் காரணமாக வளர்ந்து வரும் பல சந்தைகளின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவடையக்கூடும் என்றும், பணவீக்கம் அதிகரிப்பதுடன் நிதி அபாயங்களும் உருவாகலாம் என்றும் சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆசிய-பசுபிக் பிராந்திய நாடுகள் வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (GCC) நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை பெருமளவில் நம்பியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் விநியோக சங்கிலிகளில் சீர்குலைவுகளை ஏற்படுத்தி, பிராந்திய நாடுகளின் பொருளாதாரத்தில் தீவிரமான தாக்கங்களை உருவாக்கக்கூடும் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இந்த சூழ்நிலை ஏற்கனவே இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் வங்கித் துறையையும், ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் செயல்படும் பல நிறுவனங்களையும் பாதித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிசக்தி விலைகளில் ஏற்படும் அதிகரிப்பு, இறக்குமதி செலவுகள் உயர்வு மற்றும் நிதிச் சந்தைகளில் நிலவும் அசாதாரண நிலை ஆகியவை எதிர்காலத்தில் பொருளாதார சவால்களை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் எனவும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எச்சரித்துள்ளது.