கலைத்துறையை நவீனமயமாக்க தேசிய திட்டம் தேவை ; சஜித் வலியுறுத்தல்
இலங்கையின் சினிமா மற்றும் கலைத்துறையைப் பாதுகாத்து நவீனமயமாக்குவதற்காக தேசிய மட்டத்திலான வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டியது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (20) நடைபெற்ற இலங்கை சினிமா கலைஞர்கள் சங்கத்தின் பணிப்பாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
சந்திப்பின்போது, நாட்டின் கலைத்துறை எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ZU1W2I ]
1960, 1970, 1980 மற்றும் 1990களுடன் ஒப்பிடுகையில், கலைத்துறை பாரிய மாற்றங்களை எதிர்கொண்டுள்ளதாக சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நீண்டகாலமாக இயங்கி வரும் நிறுவனங்களைப் பாதுகாப்பதோடு, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மாறிவரும் ரசிகர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப துறையை நவீனமயமாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பழைய மற்றும் புதிய அணுகுமுறைகள் இணைந்து முன்னேற வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கலைத்துறைக்குத் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்காக கலைஞர்கள் மற்றும் படைப்புத் தொழில்துறையினருக்கு சலுகை வட்டி அடிப்படையிலான கடன் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் பரிந்துரைத்தார்.
நிதி உதவிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கலைப் படைப்புகள் ரசிகர்களை சென்றடையும் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக வழிமுறைகளையும் உருவாக்க வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், இல்லையெனில் கலைஞர்கள் கடன் சுமைக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாக எச்சரித்தார்.
பாரம்பரிய ஊடகங்களுடன் இணைந்து, YouTube, Netflix மற்றும் Artificial Intelligence உள்ளிட்ட புதிய தளங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கலைத்துறையை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர், அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன் தேசிய சினிமா வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
இதற்காக கலைஞர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், இது தொடர்பான விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுக்க எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.