மாகாண சபைத் தேர்தல் குறித்து விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டும் ; மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தல்
இலங்கையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டுக்குள் நடத்துவது சாத்தியமற்றது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் இவ்வளவு காலம் தாமதமடைந்ததற்கு நாடாளுமன்றமும், கடந்த காலத்திலும் தற்போதும் ஆட்சியில் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் அரசாங்கத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் பெரும் பொறுப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதால், பழைய முறையிலோ அல்லது புதிய முறையிலோ தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானிக்க முடியும் என்றும் கூறினார்.
இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இது தொடர்பான பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், அந்த விவகாரத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி, அதன் அனுமதியைப் பெற்று தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இன்றி ஆளுநர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருவதாக சுட்டிக்காட்டிய அவர், மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிர்வாகம் ஒருபோதும் மக்கள் ஆட்சியாக இருக்க முடியாது என்றும் அது ஜனநாயகத்திற்கு முரணானது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டால், எல்லை நிர்ணய அறிக்கையை மறுசீரமைப்பதற்காக புதிய எல்லை நிர்ணயக் குழுவொன்றை அமைத்து அதன் பணிகளை நிறைவு செய்ய குறைந்தது நான்கு மாதங்கள் தேவைப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனால் இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த முடியாது என அவர் வலியுறுத்தினார். தேர்தலுக்கான நிதி தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டார்.
திறைசேரியில் போதுமான நிதி இருப்பதாக கூறப்பட்டாலும், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, தேவையான நிதி இல்லை என்றும், அந்தப் பணம் டிட்வா பாதிப்புகளை சீரமைப்பதற்காக பயன்படுத்தப்பட்டுவிட்டதாகவும் கூறியிருந்தார் என நினைவூட்டினார்.
அரச சேவையில் பணியாற்றிய காலத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி வேறு செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டதாகத் தாம் கேள்விப்பட்டதில்லை என்றும், தற்போது அத்தகைய நடைமுறை உள்ளதா என்பது குறித்து தமக்குத் தெரியாது என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.