அசத்தலான தகவல்; காதல் துணைக்கு அழைப்பு விடுக்கும் ஐரோப்பிய நாடு ; இலங்கையர்களுக்கும் வாய்ப்பு!
பின்லாந்தின் உத்தியோகபூர்வ சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனமான ‘Visit Finland’, உலகம் முழுவதும் உள்ள தனிமையில் இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு அனைத்து செலவுகளையும் உள்ளடக்கிய விசேட சுற்றுலாத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
‘Finnish Dinner Date’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்படும் 16 வெளிநாட்டவர்களுக்கு பின்லாந்தின் உணவுக் கலாசாரத்தை அனுபவிப்பதுடன், அந்நாட்டைச் சேர்ந்த தனிநபர்களைச் சந்தித்து புதிய உறவுகளை உருவாக்குவதற்கும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

‘Finnish Dinner Date’ என பெயரிடப்பட்டுள்ள திட்டம்
பின்லாந்தில் வசிக்காத, 18 வயதுக்கு மேற்பட்ட உலகின் எந்தவொரு நாட்டைச் சேர்ந்த தனிநபரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். இலங்கையர்களும் இதில் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
இத்திட்டத்திற்காக உலகம் முழுவதிலுமிருந்து 16 தனிநபர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். தெரிவு செய்யப்படுபவர்களுக்கு விமானப் பயணச்சீட்டுகள், தங்குமிடம், உணவு மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளுக்கான செலவுகள் உள்ளிட்ட வசதிகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

2027 ஆம் ஆண்டு பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை இச்சுற்றுலாத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக பின்லாந்தின் ஹெல்சின்கி (Helsinki) மற்றும் டாம்பேரே (Tampere) ஆகிய நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நகருக்கும் தலா எட்டு வெளிநாட்டவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அவர்கள் பின்லாந்தைச் சேர்ந்த உள்ளூர் தனிநபர்களுடன் இணைந்து விசேட இரவு விருந்துகளில் கலந்துகொண்டு, அந்நாட்டின் பாரம்பரிய உணவுகள் மற்றும் உணவுக் கலாசாரத்தை அனுபவிக்கவுள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் ஆங்கிலத்தில் ஒரு குறுகிய காணொளியைத் தயாரிக்க வேண்டும். அதில், “ஒரு இரவு விருந்தில் நீங்கள் என்ன உணவைப் பரிமாறுவீர்கள், ஏன்?” (What would you serve on a dinner date, and why?) என்ற கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும். அந்தக் காணொளியை Instagram, TikTok அல்லது YouTube தளங்களில் பதிவேற்றி, #FinnishDinnerDate என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்துவதுடன் Visit Finland உத்தியோகபூர்வ கணக்கையும் குறியிட வேண்டும்.

பின்னர் Visit Finland இன் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, காணொளியின் இணைப்பையும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் தனித்தனியாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2026 நவம்பர் 10 ஆகும். தெரிவு செய்யப்படும் 16 பேர் தொடர்பான அறிவிப்பு டிசம்பர் முதலாம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்லாந்தில் பிரபலமடைந்துள்ள ‘Sinkkukori’ (Single Basket) என்ற சமூகப் போக்கை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகளில் இளஞ்சிவப்பு நிறக் கூடைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தாங்கள் தனிநபர்கள் என்பதையும், புதிய நபர்களைச் சந்திப்பதில் ஆர்வமாக இருப்பதையும் சிலர் வெளிப்படுத்துகின்றனர்.
இந்தக் கருத்தாக்கத்தை சர்வதேச அளவில் அறிமுகப்படுத்துவதுடன், பின்லாந்தின் உணவுக் கலாசாரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். எனினும், இத்திட்டத்தில் பங்கேற்பது காதல் உறவு அல்லது துணை கிடைப்பதை உறுதிப்படுத்தாது.
புதிய நபர்களைச் சந்தித்து அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பாகவே இது அமைந்துள்ளது. பின்லாந்தின் கலாசாரத்தை அனுபவிப்பதுடன் புதிய நட்புறவுகளை உருவாக்க விரும்பும் இலங்கையர்களும் Visit Finland இன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.