கணவரைக் கொன்று ஏரியில் வீசிய மனைவி ; இரு காதலர்களுடன் கைது
தனது கணவரைக் கொலை செய்து, அவரது உடலை ஏரியில் வீசி, மரணத்தை விபத்தாகச் சித்தரிக்க முயன்ற பெண் உட்பட மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில், ஹன்மாஜிபேட் கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய தினக்கூலித் தொழிலாளியான சக்கலி என்கிற கும்மாடி காசிராம் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை தொடர்பில் அவரது மனைவியான 25 வயதுடைய கும்மாடி சவிதா மற்றும் அவரது இரு காதலர்களான 26 வயதுடைய சிந்தகிந்தி ராமு, 25 வயதுடைய பசுபுலா சந்தோஷ் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறையினரின் தகவலின்படி, சவிதா தினக்கூலித் தொழிலாளியான ராமு மற்றும் டிராக்டர் ஓட்டுநரான சந்தோஷ் ஆகிய இருவருடனும் தொடர்பில் இருந்துள்ளார்.
இதனால், தனது கணவரைத் தீர்த்துக்கட்ட இருவருடனும் இணைந்து அவர் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி இரவு, மது அருந்தலாம் எனக் கூறி காசிராமை மூவரும் கிராமத்திற்கு வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு காசிராம் மதுபோதையில் இருந்தபோது, ராமு நைலோன் கயிற்றைப் பயன்படுத்தி அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
இதன்போது, சந்தோஷ் காசிராம் தப்பிச் செல்ல முடியாத வகையில் அவரைப் பிடித்துக் கொண்டிருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலையைத் தொடர்ந்து, காசிராமின் உடலை கிராமத்திற்கு வெளியே அமைந்துள்ள பச்சேரா செருவு ஏரியில் வீசியுள்ளனர். அவரது மரணம் நீரில் மூழ்கி ஏற்பட்ட விபத்தாகத் தோன்றும் வகையில் சம்பவத்தை மறைக்கவும், தடயங்களை அழிக்கவும் முயன்றுள்ளனர்.
ஒக்டோபர் 23ஆம் திகதி இரவு பச்சேரா செருவு ஏரிப் பகுதியில் காசிராமின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, உயிரிழந்தவரின் தந்தையான சக்கலி பூமய்யா அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், பன்சுவாடா காவல்துறையினர் முதலில் சந்தேகத்திற்கிடமான மரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.
எனினும், உடற்கூராய்வின் முதற்கட்ட அறிக்கையில் காசிராம் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, சந்தேக மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 103ஆவது பிரிவின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
சம்பவ இடத்தை ஆய்வு செய்த காவல்துறையினர், சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதுடன், தொழில்நுட்ப ஆதாரங்களையும் சேகரித்தனர்.
இதன் மூலம் கொலையின் பின்னணி மற்றும் அதில் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி ஹன்மாஜிபேட் கிராமத்தில் வைத்து சவிதா, ராமு மற்றும் சந்தோஷ் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையின்போது, மூவரும் கொலையில் தங்களுக்குள்ள தொடர்பை ஒப்புக்கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றத்துடன் தொடர்புடைய அலைபேசிகள் உள்ளிட்ட பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு தற்போது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 103 மற்றும் 238ஆவது பிரிவுகளுடன், 3(5)ஆவது பிரிவையும் இணைத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.