பாலசந்திரன் மரணம் ; காலமும் கர்மாவும் மகிந்த ராஜபக்சவுக்கு தண்டனை கொடுத்துவிட்டது
இலங்கையில் இறுதிக்கப்ப்ட்ட போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சிறுவன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக மகிந்த ராஜபக்ச வருந்துவதாக, நாமல் ராஜபக்ச கூறியுள்ள நிலையில் , காலமும் கர்மாவும் அவர்களுக்கு கொடுத்த தண்டனையாகவே இதனை கருதுகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மத்திய கல்லூரி பிரதான நுழை வளைவு திறந்து வைக்கும் நிகழ்வு இன்று கல்லூரியின் முதல்வர் சவரி பூலோகராஜா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பின் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
அப்பாவிப் பாலகன் பாலச்சந்திரன் கொலை
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் அப்பாவிப் பாலகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக மகிந்த ராஜபக்ச வருந்துவதாக செய்திகள் வெளிவந்திருப்பது. உன்னிப்பாக அவதானிக்கப்படவேண்டியது.
அப்பாவி மாணவன் குழந்தையாக இருக்கின்றபோது பிஸ்கட் கொடுத்து அவரை மிக அருகில் வைத்து சுட்டுக்கொன்றார்களோ, அதனை சிந்திக்காத மகிந்தவின் குடும்பம், இப்பொழுதாவது மகிந்த ராஜபக்சவின் வாயால் அதனை ஒரு கனதியான வேதனையாக வெளிப்படுத்தியிருப்பதை மிக அவதானத்துடன் பார்க்கிறோம்.
இந்த மண்ணில் மிகப்பெரிய மனிதப்பேரவலங்களை நடாத்துவதற்கு காரணமாக இருந்த மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பம் சார்ந்தவர்கள் இன்றாவது ஈழத்தமிழர்களுக்கு நடந்த அநீதி தொடர்பாக மெல்ல வாய் திறக்க நினைப்பது காலமும் கர்மாவும் அவர்களுக்கு கொடுத்த தண்டனையாகவே கருதுகிறேன்.
ஜனாதிபதியாக அவர் இருந்த காலகட்டத்தில் யுத்தம் முடிந்த போது இந்த நாட்டில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையை தீர்க்கக்கூடிய மிகப்பெரிய தலைவராக அவர் இருந்தார்.
அவருக்கு சிங்கள மக்களின் அதிகமான ஆதரவு இருந்தது. இனப்பிரச்சனையை தீர்த்திருக்க முடியும் வரலாற்றை பிழைவிட்ட தலைவராக வாழ்கின்றார்.
அவர் இப்பொழுதாவது உணர தலைப்பட்டிருப்பது. வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக பார்க்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
தந்தை வருந்தியதாக கூறிய நாமல்
செவ்வி ஒன்றின்போது, போர் காலத்தில் அதிபராக இருந்த தங்கள் தந்தை மிகவும் கவலை அடைந்த சம்பவம் எதுவும் நினைவிருக்கிறதா என நாமல் ராஜபசவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்சே, "ஒன்று கெப்பிட்டிபொல சம்பவம், மற்றொன்று பிரபாகரனின் இளைய மகன் உயிரிழந்த தகவல் வந்தபோது தனது தந்தை மஹிந்த ராஜபக்சே கவலை அடைந்ததாக நாமல் ராஜபக்ச கூறினார்.
அந்த பிள்ளைகள் போரில் சம்பந்தப்படவில்லை என தனது தந்தை கருதியதாகவும், வேண்டுமென்றே இதனை செய்யவில்லை எனவும் நாமல் அந்த செவ்வியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.