பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி திரில் வெற்றி
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றின் (குரூப் 2) 45-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் அகா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைக் குவித்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் சிறப்பாக ஆடி அதிகபட்சமாக 63 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய லியாம் டாசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
165 ஓட்டங்கள் என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு, ஷாஹீன் ஷா அஃப்ரிடி கடும் நெருக்கடி கொடுத்தார்.
அவரது சிறப்பான பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள் சரிய, இங்கிலாந்து அணி தடுமாற்றத்தைக் கண்டது.
எனினும், மறுமுனையில் தனி ஒருவனாகப் போராடிய இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி சதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அவரது இந்த அபார சதத்தின் உதவியுடன், இங்கிலாந்து அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணி தனது அரையிறுதி வாய்ப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது.