யாழில் பேருந்துகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் காவாலிகள்.! நடப்பது என்ன?
யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்துகளில் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு காவாலிகள் திட்டமிட்ட ரீதியில் கடும் பாலியல் தொல்லை கொடுப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக மானிப்பாயில் உள்ள பிரபல மகளீர் பாடசாலைக்கு பேருந்துகளில் வரும் மாணவிகளுக்கு காவாலிகள் கடும் பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக பாடசாலைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களுக்கு முறைப்பாடுகளைக் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
நவீன மோட்டார் சைக்கிள்களில், காதுகளில் தோடு மற்றும் தலைகளுக்கு நிறப்பூச்சுகள் போன்றவற்றை பூசி வரும் ரவுடித்தனமான காவாலிகளும் நாகரீக உடைகளில் வரும் காவாலிகளும் மாணவிகளுக்கு இவ்வாறான பாலியல் தொல்லைகளை கொடுத்து வருகின்றார்கள்.
மோட்டார் சைக்கிள்களை குறிப்பிட்ட இடங்களில் விட்டுவிட்டு, பாடசாலைக்குச் செல்லும் நேரங்களைக் குறிவைத்து அரச மற்றும் தனியார் பேருந்துகளில் ஏறும் காவாலிகள் யாரையும் பொருட்படுத்தாது மாணவிகளுக்கு அருகில் சென்று பாலியல் தொல்லைகள் கொடுத்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களின் நடவடிக்கை தொடர்பாக பேருந்துகளில் நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் மௌனமாக இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மாணவிகள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பாடசலைகள் செல்லும் நேரங்கள் மற்றும் பாடசாலை விடும் நேரங்களில் இதற்காக காத்திருந்து இவர்கள் செயற்படுவதாக தெரியவருகின்றது.
இதனால் குறித்த பாடசாலைக்கு பேருந்துகளில் செல்லும் மாணவிகள் பலர் கடும் அச்சத்தில் உறைந்துள்ளதாகவும் பாடசாலைத் தரப்பிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
எனினும், பாடசாலைத் தரப்பைச் சேர்ந்தவர்கள் பொலிஸ் மற்றும் தமது உயரதிகாரிகளுக்கு முறையிட்டும் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
நாளை பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கவுள்ள நேரத்தில் இந்த காவாலிகளின் செயற்பாடுகளுக்கு முடிவு கட்டப்படுமா என்ற ஏக்கம் மாணவிகள் தரப்பிலிருந்து எழுந்துள்ளது.
மேலும், காங்கேசன்துறை வீதி மற்றும் பலாலி வீதி, காரைநகர் - மானிப்பாய் – யாழ் வீதி போன்ற இடங்களால் யாழ் நகரப்பகுதிக்கு பேருந்துகளில் வரும் மாணவிகளுக்கும் இவ்வாறான பாலியல் தொல்லைகளைக் காவாலிகள் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.