யாழ் நகரில் குடும்பத் தலைவர் மீது கொடூர தாக்குதல்!
யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் குடும்பத் தலைவர் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் வீட்டில் இருந்த உடமைகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. இந்த நிலையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே குறித்த தாக்குதலை நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக பொலிசார் முறைப்பாடு பதிவு செய்யவில்லை என்று தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் தெரிவிக்கையில்,
வீட்டின் ஒழுங்கையில் மதுபோதையில் இருவர் நின்றிருந்த நிலையில் அவர்கள் தகாத வார்த்தைகளை பிரயோகித்தததாக தெரிவித்து , வீதியால் சென்ற இருவர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த சம்பவத்தை பார்த்ததும், அங்கு சென்று பிரச்சனையை தீர்த்துவைக்க முயன்றதுடன், தாக்குதல் நடத்தியவர்களிடம், நீங்கள் யார் என விசாரித்தபோது, தம்மை புலனாய்வு பிரிவினர் என தெரிவித்துடன் அவர்கள் அடையாள அட்டையையும் எடுத்துக் காண்பித்தனர்.
அதனை நான் படம் எடுத்ததுடன் அவர்களது வந்த மோட்டார் சைக்கிளையும் படம் எடுத்தேன். இந்த நிலையில் அன்றைய தினம் இரவு 7 மணியளவில் 7,8 மோட்டார் சைக்கிளில் வந்த 15 – 20 பேர் என் மீது தாக்குதல் நடத்தினர். அத்துடன் அவர்களிடம் என கைபேசி கொடுக்க மறுத்த போது இன்னும் கடுமையாக தாக்கினர். வீட்டில் இருந்த பொருட்களால், போத்தல்களால் தாக்குதலை நடத்தியபின்னர் கைபேசியை பறித்துச் சென்றதுடன் வீட்டிலிருந்த சங்கிலியையும் எடுத்துச் சென்றனர்.
சம்பவம் தொடர்பில் உடனேயே யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றபோது அவர்கள் மறுநாள் காலையில் முறைப்பாடு பதிவு செய்ய வருவதாக தெரிவித்தனர். மறுநாள் காலையில் சிவில் உடையில் வந்த போலிசார், வீட்டில் பொருட்கள் உடைந்திருந்ததை படம் எடுத்தனர். அந்த பொருட்களை வாங்கித் தந்தால் போதுமானது தானே என்ற கோணத்திலேயே கதைத்ததுடம் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த விடயங்கள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் நேற்று முன்தினம் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனியடுத்து சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை ஆரம்பித்துள்ள ஆணைக்குழு, யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிகப்படுகின்றது.