வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக 19.2 மில்லியன் ரூபாய் மோசடி : இளைஞர் கைது
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி மோசடி செய்த குற்றச்சாட்டில் மூதூரைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மட்டக்களப்பு காவல்துறை தலைமையகத்திற்கு அருகிலுள்ள கல்முனை வீதியில் ‘F.S. குளோபல் ராவல்’ என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி 12 நபர்களிடம் 19.2 மில்லியன் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
ருமேனியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, பாதிக்கப்பட்ட 12 பேரிடமும் தலா 1.6 மில்லியன் ரூபாய் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு பெற்று தருவதாக மோசடி
2023ம் ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி மேற்குறிப்பிட்டவர்களின் ஆவணங்களையும் பணத்தையும் பெற்றுக்கொண்டு பல மாதங்களாக தங்கள் பயணத்தை தாமதப்படுத்தியுள்ளார்.
இறுதியில் பணத்தையும் தர மறுத்ததை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மட்டக்களப்பு சிறப்பு புலனாய்வுப் பிரிவு மற்றும் கொழும்பு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் புகார்களை அளித்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் கபில கருணாரத்ன தலைமையிலான குழு, திங்கட்கிழமை (03) அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தியுள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
இதன் போது இந்நிறுவனம் பதிவு செய்யப்படாதுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றோடு வேலை தேடுபவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் அடங்கிய 74 கோப்புகள் கைப்பற்றப்பட்டதுடன் நிறுவனத்தின் விளம்பரப் பலகைகளையும் பொலிஸார் அகற்றியுள்ளனர்.
சந்தேக நபர் தற்போது பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இதற்கிடையில், வெளிநாடு செல்லும் ஆசையில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் இருந்தும் இந்நிறுவனத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள், மோசடி நிறுவனத்திற்கு தலா 1.6 மில்லியன் ரூபாய் முதல் 2 மில்லியன் ரூபாய் வரை செலுத்தியதாக கூறப்படுகின்றது.