மர்மம் கொலை தொடர்பில் தீவிர விசாரணை ; மாயமான முச்சக்கர வண்டி
வாடகைக்குச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்று சாரதியைக் கொலை செய்து, முச்சக்கர வண்டியை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் புத்தளம் - தில்லையடி, அல்-காசிம் கிராமத்தைச் சேர்ந்த 72 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
கடந்த 21ஆம் திகதி இரவு உயிரிழந்தவரின் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர், சவாரி ஒன்றிற்குச் செல்வதாகக் கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

இன்று (22) அதிகாலை புத்தளம் - அடப்பனவில்லு பகுதியில் உள்ள வாய்க்கால் ஒன்றில் சடலம் ஒன்றைக் கண்ட பிரதேசவாசி ஒருவர், அது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், முந்தைய நாள் வாடகைக்குச் சென்ற முச்சக்கர வண்டியின் உரிமையாளர் என அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுடன், மரணம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.