இளைஞர்களை ஏமாற்றிய போலி வெளிநாட்டு வேலை மாஃபியா ; பொலிஸார் அதிரடி சோதனை
ருமேனியாவில் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி பல இலட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் கொட்டாஞ்சேனை பகுதியில் இயங்கி வந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்று அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள், குறிப்பாக பேஸ்புக் வழியாக “ருமேனிய தொழிற்சாலைகளில் பாரிய வேலைவாய்ப்புகள்” என விளம்பரம் செய்து, தொழிற்சாலைக் களஞ்சியம், ஹோட்டல், துப்புரவுத்தொழில், கட்டிடத்தொழில் மற்றும் வெதுப்பகத் தொழில்களில் வேலை பெற்றுத் தருவதாக இளைஞர்களிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தலா 16 இலட்சம் ரூபாய் வரை பணம் வசூலிக்கப்பட்டதுடன், 3 முதல் 4 மாதங்களுக்குள் ருமேனியாவிற்கு அனுப்பி வைப்பதாக முகவர் நிலைய உரிமையாளர் வாக்குறுதி வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், அந்த வாக்குறுதிகளை நம்பி கடன் பெற்று ருமேனியாவிற்கு சென்ற இளைஞர்கள் அங்கு கடுமையான சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாக்குறுதியளிக்கப்பட்ட தொழிற்சாலைக் களஞ்சிய வேலைக்குப் பதிலாக, ‘மேன்பவர்’ நிறுவனங்கள் ஊடாக பாரிய கப்பல்களில் மசகு எண்ணெய் அகற்றும் ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தெரிவிக்கையில், தங்களிடம் இருந்து 16 இலட்சம் ரூபாய் முழுமையாக வசூலிக்கப்பட்டதாகவும், தற்போது கைகளும் கால்களும் வீங்கி உடல்நலக்குறைவுகளுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறினார்.
மேலும், தொழில் அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி கூடுதல் பணமும் வசூலிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த முகவர் நிலையத்தின் உத்தியோகபூர்வ பதிவு கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியானது கண்டறியப்பட்டுள்ளது.
பதிவு காலாவதியான பின்னரும், மேலும் பல இளைஞர்களை ருமேனியாவிற்கு அனுப்பும் நோக்கில் கொட்டாஞ்சேனையில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஹிரு CIA வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது, அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படாமல் சட்டவிரோதமாக நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த நிறுவனத்திற்கு எதிராக கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்படும் வரை, அந்த நிறுவனத்தின் அனைத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆட்கள் சேர்ப்பு நடவடிக்கைகளும் மற்றும் நேர்முகத் தேர்வுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.