அரச வங்கி கொள்ளை தொடர்பில் வெளியான பல முக்கிய உண்மைகள்
களுத்துறை ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பல முக்கிய விபரங்களை பொலிஸார் வெளிக்கொணர்ந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் அந்த வங்கியின் உதவி முகாமையாளர் இன்று (7) குறித்த வங்கி வளாகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.
சந்தேகநபான உதவி வங்கி முகாமையாளர் பல்வேறு பெண்களிடம் இருந்து வட்டிக்கு கடன் பெற்றுள்ள நிலையில், அதற்கான வட்டி தொகையினை செலுத்துவதற்காகவே வங்கியிலிருந்து இப்பண மோசடியைச் செய்துள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர் அவ்வாறு பெற்ற பணத்தைச் இரத்தினக்கல் போன்ற பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளமையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும், குறித்த அரச வங்கியின் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணத்தை வைப்புச் செய்யும் பணியை இந்த சந்தேகநபரே மேற்கொண்டு வந்துள்ளார்.
வங்கியினால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விடக் குறைவான பணத்தையே அவர் ஏ.டி.எம் இயந்திரங்களில் வைப்புச் செய்துவிட்டு, மீதிப் பணத்தை நீண்ட காலமாகத் தம்வசம் இரகசியமாக வைத்திருந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த வங்கியில் நீண்ட காலமாக நேரடி நிதி கணக்காய்வு எதுவும் நடத்தப்படாத காரணத்தினாலேயே, இந்த மோசடி வெளியில் தெரியாமல் இருந்துள்ளது.
இதேவேளை, இந்த உதவி முகாமையாளர் பல்வேறு நபர்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து வந்துள்ளதுடன், தமக்கு நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்த மொடலிங் துறையைச் சேர்ந்த இளம் பெண்கள் பலருக்கு பெருமளவில் பணத்தைச் செலவிட்டுள்ளார் என்பதும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, இந்த அரச வங்கியில் வெளிநபர் எவராலும் பணக் கொள்ளையிடப்பட்டமைக்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை.
இது, சந்தேகநபரான உதவி முகாமையாளர், பாதுகாப்பு உத்தியோகத்தரை இணைத்துக்கொண்டு மிகவும் திட்டமிட்ட முறையில் ஜோடித்த ஒரு போலியான குற்றச்சாட்டாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டி.டபிள்யூ.சி.தர்மரத்னவின் வழிகாட்டலில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.