திடீர் திடீரென வெடித்து சிதறும் செல்போன்கள்: தடுக்க இந்த டிப்ஸ்களை பின்பற்றினால் போதும்!
கைபேசிகள் திடீர் திடீரென என வெடித்துச் சிதறும் சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்று வரும் நிலையில், அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் தவிர்க்கவே முடியாத ஒன்றாக மொபைல்கள் இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கைபேசியை பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் சில இடங்களில் சென்போன்கள் வெடித்துச் சிதறும் சம்பவங்களும் நம்மைப் பதற வைப்பதாகவே இருக்கிறது.
பொதுவாக செல்போன்கள் வெடித்துச் சிதற வாய்ப்புகள் குறைவு என்றாலும் கூட சில குறிப்புகளை பின்பற்றினால் அதை வெகுவாக குறைக்கலாம்.
அதற்கு முன்பு செல்போன் வெடிக்கும் அபாயம் ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
செல்போன்கள் பெரும்பாலும் வெடிக்கும் போது அதில் சில அறிகுறிகள் தென்படும். அப்போதே உங்கள் செல்போனை தூர வைத்துவிடுங்கள். இல்லையென்றால் உடலில் தீக்காயம் முதல் உயிரிழப்பே கூட ஏற்படும் அபாயம் இருக்கிறது.
கைபேசியில் இருந்து மெலிதாக சத்தம் வரும். பிளாஸ்டிக் எரிவது அல்லது கெமிக்கல் வாசனை கூட வரத் தொடங்கும். அதேபோல வந்தால் அடுத்த சில நிமிடங்களில் செல்போன் வெடிக்கும் ஆபத்து இருக்கிறது என்று அர்த்தம்.
இதுபோன்ற நேரங்களில் செல்போனை கையில் எடுக்காதீர்கள். தப்பித் தவறிக் கூட சார்ஜ் போடவும் வேண்டாம்.
தவிர்க்க வேண்டியவை: பெரும்பாலான நேரம் மொபைல் சார்ஜ் போட்டிருக்கும் போது தான் அவை வெடித்துச் சிதறும் ஆபத்து இருக்கிறது.
இதற்கான வாய்ப்பு மிக குறைவு என்றாலும் பரவலாக இதுபோன்ற சம்பவங்களே நடக்கிறது.
மொபைல் சூடு ஆவதே இதற்குக் காரணமாகும். மொபைல் சார்ஜ் ஆகும் போது சும்மாவே அதில் வெப்பம் அதிகரிக்கும். அதுபோன்ற நேரத்தில் நாம் போன் பேசும்போது, மொபைல் வெடித்து சிதறும் அபாயம் இருக்கிறது. எனவே, கண்டிப்பாக சார்ஜ் போட்டு கைபேசியில் பேசாதீர்கள்.
இதேவேளை, சார்ஜ் போட்டுவிட்டு மொபைலில் கேம் விளையாடினாலும் கூட அதன் வெப்பம் அதிகரிக்கும். இதன் காரணமாகக் கூட செல்போன் வெடித்துச் சிதறும் அபாயம் இருக்கிறது. எனவே, சார்ஜ்ஜில் இருக்கும் போது கேம்களை விளையாடுவதை தவிர்க்கவும்.
மேலும், இரவு முழுக்க மொபைலை சார்ஜ் போடாதீர்கள். இதன் காரணமாகவும் கூட மொபைலில் வெப்பம் அதிகமாகும்.
பழைய மாடல் மொபைல்களில் தான் சார்ஜ் மிகவும் குறைவாக இருக்கும் வரை பயன்படுத்திவிட்டு 100 சதவீதம் வரும் வரை சார்ஜ் போட வேண்டும் என்பார்கள்.
ஆனால், இப்போது வரும் மொபைல்களில் 20% வரும் போதே சார்ஜ் போட்டுவிடலாம். அதேபோல 80%க்கு மேல் வந்ததும் எடுத்துவிடலாம். இதுவும் செல்போன் சூடு ஆவதை தவிர்க்கும்.
மேலும், முடிந்தவரை நிறுவனம் அளித்த சார்ஜர்களையே பயன்படுத்துங்கள். மலிவான செல்போன் மூலம் சார்ஜ் செய்யும் போதும் இந்தச் சிக்கல் ஏற்படும்.
எனவே, முடிந்தவரைச் சம்மந்தப்பட்ட நிறுவனம் அளித்த சார்ஜர்களையே பயன்படுத்துங்கள். அல்லது நல்ல தரமான சார்ஜர்களை பயன்படுத்தினால் வெடிப்பு சம்பவங்களை தவிர்க்கலாம்.