விமானத்தில் இலங்கை பெண்ணுக்கு சீன பிரஜை செய்த செயல்
துபாயிலிருந்து வந்த இலங்கை பயணி ஒருவரிடமிருந்து 1,314,400 ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகளைத் திருடிய சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரலஸ்கமுவவைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவர் அபுதாபியிலிருந்து ஃப்ளை துபாய் FZ-579 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளதுடன் அவர் விமானப் பணிப்பெண்ணின் வேண்டுகோளுக்கமைய தனது கைப்பை அவரது இருக்கைக்கு மேலே உள்ள லக்கேஜ் ரேக்கில் வைத்துள்ளார்.

மேலதிக விசாரணை
அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறி ஒரு வாகனத்திற்குப் பணம் செலுத்துவதற்காக கைப்பையைப் பார்த்தபோது அவரது பணம் மற்றும் நகைகள் காணாமல் போயுள்ளதை அவதானித்துள்ளார்.
பின்னர் குறித்த பெண் இது தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் முறைபாடு செய்ததையடுத்து அவரை அழைத்துச் சென்று பாதுகாப்பு கேமராக்களை கண்காணித்த போது, சந்தேகத்திற்கிடமான சீன நாட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பின்னர், இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளையடுத்து சந்தேக நபரான சீன பிரஜை கிம்புலாபிட்டிய பகுதியில் ஒரு சீனப் பெண் நடத்தும் விடுதியில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான 25 வயதுடைய சீன நாட்டவர், அவர் தூங்கிக் கொண்டிருந்த தலையணை உறையில் இந்த வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகள் அனைத்தையும் மறைத்து வைத்து தூங்கிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.