இறந்ததாக நினைத்த 103 வயது மூதாட்டி பிறந்தநாளிலேயே மீண்டும் உயிர் பிழைத்த அதிசயம்
103 வயதான மூதாட்டி இறந்ததாகக் கருதப்பட்டு, இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிலையில், அவர் மீண்டும் உயிர் பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கங்காபாய், திடீரென சுவாசிக்கத் தவறியதால் அவர் இறந்துவிட்டதாக உறவினர்கள் முடிவு செய்தனர்.

கேக் வெட்டிக் கொண்டாட்டம்
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே உள்ள சர்காவ் கிராமத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கங்காபாய் சாவ்ஜி சக்ரே என்ற மூதாட்டியே இறந்து உயிர் பெற்றார்.
இந்நிலையில் துக்கச் செய்தியை அறிந்து உறவினர்கள் திரண்டனர், சமூக வலைதளங்களில் இரங்கல் செய்திகள் பகிரப்பட்டன, இறுதிச் சடங்கிற்காக அவரது காதுகளில் பஞ்சு வைக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன.
ஆனால், இறுதிச் சடங்கு தொடங்குவதற்கு சற்று முன், கங்காபாய் திடீரென தனது கால் விரல்களை அசைக்கத் தொடங்கினார். இதைக் கண்டு திகைத்துப் போன உறவினர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர் நலமுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்செயலாக அன்று கங்காபாயின் 103-வது பிறந்தநாளாகும். எனவே, கண்ணீருடன் இறுதிச் சடங்கிற்கு வந்திருந்த உறவினர்கள், பெரும் மகிழ்ச்சியுடன் அவரது பிறந்தநாளைக் கேக் வெட்டிக் கொண்டாடிவிட்டுச் சென்றனர்.
சாவு வீட்டில் தொடங்கிய இந்த நிகழ்வு ஒரு கொண்டாட்டமாக மாறியது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.