புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது
புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தசாசன அமைச்சின் மூலம் புத்தகங்களை அச்சிடும் போது, குறிப்பிட்ட கொள்முதல் நடைமுறைகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக குறித்த நபருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபர் தனக்கு நெருக்கமான நிறுவனமொன்றிடம் மூன்று சந்தர்ப்பங்களில் 4,790,000 ரூபாய் தொகையில் புத்தகங்களை அச்சிடுவதற்காகக் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த புத்தகத் தொகுதியை களஞ்சியசாலைக்கு பெற்றுக்கொள்ளாமலேயே அதற்கான கொடுப்பனவுகளைச் செலுத்தியதன் மூலம் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியமை மற்றும் தனக்கு நெருக்கமான நிறுவனத்திற்கு அதிக இலாபத்தை அளித்ததன் மூலம் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட முன்னாள் செயலாளர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.