இலங்கை வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்; நள்ளிரவில் வெளியே செல்ல தடை
இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு, நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு தங்கியிருக்கும் விடுதியிலிருந்த வெளியே இருக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, இங்கிலாந்து வீரர்கள் சிலர் மது அருந்திவிட்டு ஒழுக்கமற்ற முறையில் நடந்துகொண்டதாக முறைப்பாடுகள் எழுந்தன.

ஒழுக்கமற்ற முறையில் நடந்துகொண்டதாக முறைப்பாடுகள்
குறிப்பாக, இங்கிலாந்து அணியின் தற்போதைய மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியின் தலைவர் ஹரி புரூக், நியூசிலாந்தில் இரவு விடுதி ஒன்றின் பாதுகாவலருடன் தகராறில் ஈடுபட்டதற்காக சுமார் 36 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான சம்பவங்கள் அணியின் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கருதிய இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை(ECB), இந்தத் அதிரடி முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, வீரர்கள் அனைவரும் தினமும் நள்ளிரவு 12 மணிக்குள் தங்கியிருக்கும் விடுதிக்கு திரும்ப வேண்டும். விசேட காரணங்களுக்காக வெளியே தங்குவதென்றால், அணியின் நிர்வாகத்திடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.
கொழும்பு வந்திறங்கிய இங்கிலாந்து வீரர்களுக்கு, சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் என்ற வகையில் அவர்களின் பொறுப்புகள் மற்றும் பொது இடங்களில் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்து வேல்ஸ் கிரிக்கெட் சபை(ECB) நினைவூட்ட்டியுள்ளது.