கையிலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு; தந்தை கைது
களுத்துறை-பாணதுறையில் இரண்டரை மாத பெண் குழந்தை, தந்தையின் கையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை-பாணதுறை, அலுபோமுல்ல பகுதியை சேர்ந்த இரண்டரை மாதங்கள் வயது நிரம்பிய ருசெலி கெயாஷா என்ற குழந்தையே, லேடி ரிட்ஜ்வே குழந்தைகளுக்கான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையை ஏந்தியபடி நடந்து கொண்டிருக்கையில் தூக்கம்
சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தை நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
இரவு வேலை முடித்து வீடு திரும்பிய தந்தை, குழந்தையை கைகளில் ஏந்தியபடி நடந்துகொண்டிருந்த போது, குழந்தை தந்தையின் கையிலிருந்து தவறி சீமெந்து தரையில் விழுந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கீழே விழுந்த குழந்தை, முதலில் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தலையின் வலது பக்கத்தில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக, மூளையில் ஏற்பட்ட உள் இரத்தப்போக்கே உயிரிழப்புக்கு காரணம் என, மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, குழந்தை வீட்டில் விழுந்ததை பற்றி குழந்தையின் தந்தை தெரிவிக்கவில்லை என்றும், குழந்தைக்கு ஏதேனும் விபத்து நடந்ததா? என வைத்தியசாலையில் வினவப்பட்ட போது, குழந்தையின் பெற்றோர் இருவரும் இணைந்து அப்படியெதுவும் நடக்கவில்லை என தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்பட்ட பின், பொலிஸார் குழந்தையின் தந்தையை விசாரித்த போது, தான் குழந்தையை கையில் ஏந்தியபடி நடந்து கொண்டிருக்கையில் களைப்பால் தூங்கி விட்டதாகவும் , அதனையடுத்து குழந்தை கையிலிருந்து வழுக்கி தவறுதலாக கீழே விழுந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பயம் காரணமாக நடந்த உண்மை சம்பவங்களை மறைத்து விட்டதாகவும் தெரிவித்த குழந்தையின் தந்தை, நடந்த முழு சம்பவத்தை சொல்லி தவறை ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் குழந்தையின் தந்தை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.