முதல் ஒருநாள் போட்டி: இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி
இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
266 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்த இலங்கை அணி, இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் வில் ஜேக்ஸின் சுழலில் சிக்கி 37 ஓவர்களில் 176 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

அபார வெற்றி
முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் 265 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து அணியின் சார்பில் அணித்தலைவர் ஹரி புரூக் அதிரடியாக விளையாடி 7 நான்கு ஓட்டங்களுடன் 67 ஓட்டங்களைக் குவித்தார்.
அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஜோ ரூட் 5 நான்கு ஓட்டங்களுடன் 44 ஓட்டங்களையும், வில் ஜேக்ஸ் 5 நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணி சார்பில் அறிமுக வீரராகக் களமிறங்கிய சசிந்து கொலம்பகே 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திச் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.
மேலும் டில்ஷான் மதுஷங்க, துனித் வெல்லாலகே மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
266 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணிக்கு துனித் வெல்லாலகே 5 நான்கு ஓட்டங்கள் உட்பட 45 ஓட்டங்களையும், குசல் மெந்திஸ் 4 நான்கு ஓட்டங்களுடன் 42 ஓட்டங்களையும் பெற்ற போதிலும் ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய வில் ஜேக்ஸ் 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.