ஈஸ்டர் தாக்குதல்கள் ; வெளியானது இறுதி தீர்ப்பு ; குற்றவாளிகளுக்கு 220 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கின் இறுதித் தீர்ப்பை கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (22) அறிவித்துள்ளது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்குத் தலா 220 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்துள்ளது.

சாட்சி விசாரணைகள்
மேலும், தண்டனை பெற்ற நபர்களுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை, அவர்களுக்கான தண்டனைக் காலம் தொடங்கும் நாளிலிருந்து பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
நௌஃபர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியமை, அதற்கு உடந்தையாக இருந்தமை, இனவாத கருத்துகளைப் பரப்பியமை உள்ளிட்ட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் 8,900 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
269 பேர் உயிரிழந்து 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்த இத்தாக்குதல் வழக்கில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்திருந்த நிலையில், கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதி சாட்சி விசாரணைகள் நிறைவடைந்தன.
தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்க புதுக்கடை நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், மோப்ப நாய்கள் மற்றும் நடமாடும் சிசிடிவி வாகனங்கள் அடங்கிய பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.