பாடசாலை மாணவர்களிடையே பரவும் மூளைக்காய்ச்சல் ; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மாத்தறை தெனியாய பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் பதிவாகியிருந்த மூளைக்காய்ச்சல் நோய், தற்போது நாட்டின் மேலும் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்கள்
அதன்படி, தியத்தலாவ பகுதியில் 28 நோயாளர்களும் வெலிமடை பகுதியில் 13 நோயாளர்களும் ரிகில்லகஸ்கட பகுதியில் 25 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையே அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளுடன் இது பரவினாலும், நோய் குறித்து பொதுமக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்தார்.
இந்த அறிகுறிகள் பொதுவாக 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும் என்றும், முறையான மருத்துவ சிகிச்சையின் மூலம் நோயாளர்கள் குணமடைந்து வருவதோடு, நிலைமையைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த மூளைக்காய்ச்சல் உணவு, நீர் மற்றும் நேரடித் தொடர்பு மூலம் பரவக்கூடும் என்பதால் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மற்றும் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தானசாலைகள் மூலம் இந்த நோய் மேலும் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பொதுமக்கள் இந்த நோய் பரவல் குறித்து மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்புடனும் செயற்படுமாறு அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.