போர் வீரர்கள் நினைவுத்தூபி சம்பவம் ; வாக்குமூலம் வழங்க விமல் வீரவன்சவுக்கு பொலிஸ் அழைப்பு
கொழும்பு பத்தரமுல்லை போர் வீரர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு பொலிஸார் தமக்கு அறிவித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், எதிர்வரும் திங்கட்கிழமை தலாங்கம பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கவுள்ளதாக கூறினார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் உள்ள உரிமையின் அடிப்படையில் போர் வீரர்கள் நினைவுத்தூபிக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்த முயன்றதாக தெரிவித்தார்.
அதற்கு தடையினை ஏற்படுத்தியவர்களே தற்போது பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அறிவித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், “சட்டம் அனைவருக்கும் சமமானது என ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால், நீதி அமைச்சிற்கு சொந்தமான மல்வானை மாளிகையை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக சட்டம் செயற்படவில்லை. நாம் பொதுஇடத்திற்கே சென்றோம்.
எமக்கு ஒரு விதமான சட்டமும், அந்த மாளிகையை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக மௌனமாக இருக்கும் சட்டமும் காணப்படுகின்றது,” எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.