மதுபோதையில் மயங்கிய இ.போ.ச ஊழியர்கள்: நிர்க்கதியாய் நின்ற மக்கள்
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பொலன்னறுவை டிப்போவில் கடமையை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சாரதி மற்றும் நடத்துனர் ஒருவர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகந்த மற்றும் கல்கந்த இடையே பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர், கடமை நேரத்தில் மதுபோதையில் கடமைகளை புறக்கணித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகவே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல்
நேற்று (08) பிற்பகலில் சம்பந்தப்பட்ட பேருந்தின் சாரதியும் நடத்துனரும் வெலிகந்த போக்குவரத்து சபையின் ஓய்வறையில் மதுபோதையில் வீழ்ந்து கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில், பின்னர் வெலிகந்த பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
சம்பவ இடத்தில் நடத்துனர் ஏற்கனவே மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், சாரதி தப்பி ஓடிவிட்டதாகவும் தெரியவருகிறது. சாரதி மற்றும் நடத்துனர் இன்றி பேருந்து சேவையை இயக்க முடியாத நிலை உருவானதால், சிரமங்களை எதிர்கொண்ட பயணிகளின் நலன் கருதி வெலிகந்த பொலிஸார், பொலிஸ் ஜீப்பில் போக்குவரத்து வசதிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலன்னறுவை டிப்போ அதிகாரிகள் வெலிகந்த பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும், விசாரணைகள் நிலுவையில் உள்ளதால் சாரதி மற்றும் நடத்துனர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலன்னறுவை டிப்போவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.