நடுவானில் அசம்பாவிதம்.. அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்!
நடுவானில் பறந்துகொண்டிருக்கும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இந்தியாவில் கடந்த சில காலமாகவே விமானங்களில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டு வருகிறது. நல்வாய்ப்பாக அவை எல்லாம் சிறு பிரச்சினைகளாகவே உள்ளன.
இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடக்கவில்லை. ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ விமானங்களில் தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டு இருந்தது.
இந்தச் சூழலில், இப்போது ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான விமானத்திலும் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது.
துபாயில் இருந்து கொச்சிக்கு 258 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானத்தில் நடுவானில் திடீரென பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து விமானம் அவசர அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது.
நடுவானில் பறந்து கொண்டு இருக்கும்போது விமானத்தில் இருக்கும் காற்றின் அழுத்தம் திடீரென குறையத் தொடங்கி உள்ளது.
இதையடுத்து ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787 ரக விமானம் பத்திரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. கேபினில் காற்றின் அழுத்தம் குறைந்ததால் பயணிகள் ஆக்ஸிஜன் மாஸ்க்கள் மூலம் சுவாசிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
நல்வாய்ப்பாக இந்த விமானம் மும்பையில் பத்திரமாகத் தரையிறங்கியது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த இரண்டு மூத்த அதிகாரிகளுக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
கேபினில் இருக்கும் காற்றின் அழுத்தம் திடீரென குறைவது முக்கிய பிரச்சனை ஆகும். நடுவானில் இதுபோன்ற பிரச்சனை ஏற்படும்போது, பயணிகளுக்கு மூச்சுத் திணறலும் கூட ஏற்படும் அபாயம் உள்ளது.
இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தொழில்நுட்பக் கோளாற்றால் விமானம் மும்பைக்குத் திருப்பி விடப்பட்டதாகக் கூறப்பட்டு உள்ளது.
"போயிங் 787 விமானம் 247 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் இரவு 7:12 மணிக்கு மும்பையில் பத்திரமாகத் தரையிறங்கியது.
இதையடுத்து மாற்று விமானம் மூலம் பயணிகள் மும்பையில் இருந்து கொச்சிக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.