அடுத்த காலாண்டில் மின் கட்டணம் குறித்து வலுசக்தி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
எதிர்வரும் காலாண்டில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்பட மாட்டாது என வலுசக்தி அமைச்சர் கலாநிதி அநுர கருணாநிலக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிர்ப்பு ; தேசியக் கொடியுடன் போராட்டத்தில் குதித்த பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்
அத்துடன், எல் நினோ காலநிலை தாக்கம் காரணமாக நாட்டின் மின்சார உற்பத்தியில் பாரிய பாதிப்புகள் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அமைச்சுசார் அறிவித்தல்களின் கீழ் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் மக்களுக்கு தடையற்ற மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
2026 ஆம் ஆண்டில் எல் நினோ நிலைமை காரணமாக மின்சார உற்பத்தியில் பாரிய பாதிப்புகள் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுவதாகவும், எதிர்பார்த்ததை விட அதிகளவு மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதால் மின்சார உற்பத்திச் செலவை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக, எதிர்வரும் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான எந்தவொரு கோரிக்கையும் விடுக்கப்பட மாட்டாது என அமைச்சர் உறுதியளித்தார்.
மேலும், அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குத் தேவையான மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை தடையின்றி முன்னெடுக்க வலுசக்தி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எல் நினோ நிலைமை தற்போது தீவிரமடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், கடந்த ஜூலை மாதம் முதல் இலங்கையில் அதன் தாக்கம் தீவிரமாகக் காணப்படுவதாகவும், இந்த நிலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை நீடிக்கக்கூடும் எனவும் தெரிவித்தார்.
அதேநேரம், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஓகஸ்ட் மாதம் வறட்சியான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், எதிர்பார்த்ததை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நாட்டின் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 58.7 வீதமாக இருப்பதாகவும், இது 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிறந்த நிலை எனவும் அவர் தெரிவித்தார்.
எல் நினோ தாக்கத்தால் மின்சார உற்பத்தியில் பாரிய பாதிப்புகள் ஏற்படாது என்றும், எதிர்மறையான தாக்கங்களை விட நேர்மறையான விளைவுகளே அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், 2027 ஆம் ஆண்டு ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சில தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.