கொக்கட்டிச்சோலை ஆலய குரு சிவஸ்ரீ வ. சோதிலிங்கம் குருக்கள் இறைவனடி சேர்ந்தார்
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பெருநிலப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் நீண்டகால ஆலய குருவாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய சிவஸ்ரீ வ. சோதிலிங்கம் குருக்கள் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை சுகவீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பூர்வீக கால பாரம்பரிய நடைமுறைகள் தொடர்பில் ஆழ்ந்த அறிவு கொண்டிருந்த அவர், அவற்றை ஆதாரபூர்வமாக மற்றவர்களுக்கு தெளிவுபடுத்தக்கூடிய ஒரு வரலாற்றுப் பொக்கிஷமாகத் திகழ்ந்தார்.

ஆலயத்தின் நீண்டகால வரலாறு மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் தொடர்பான பல்வேறு அரிய தகவல்களை அவர் அறிந்திருந்ததுடன், அவற்றை அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துரைப்பதில் பெரும் அக்கறை கொண்டிருந்தார்.
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் 1998 முதல் 2004 வரை வண்ணக்கராகவும் செயலாளராகவும் பணியாற்றிய காலப்பகுதியில், ஆலயத்தின் பல்வேறு வரலாற்றுத் தகவல்களை சோதிலிங்கம் குருக்கள் தனக்குத் தெரிவித்திருந்ததாக நெருங்கியவர்கள் நினைவுகூருகின்றனர்.
அடியார்கள் மத்தியில், “கொக்கட்டிச்சோலை சிவன் கோயில் என்றால் சோதிலிங்கம் குருக்கள்; சோதிலிங்கம் குருக்கள் என்றால் கொக்கட்டிச்சோலை சிவன் கோயில்” என்ற எண்ணக்கருத்தே நீண்டகாலமாக நிலவி வந்தது.
அன்னாரின் இல்லம் மட்டக்களப்பு கூளாவடியில் அமைந்துள்ளதுடன், அன்னாரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.