தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபருக்கு மின்சார அதிர்ச்சி ; சமூக வலைத்தள செய்திகள் போலியானவை
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவருக்கு மின்சார அதிர்ச்சி கொடுத்ததாகக் கூறி, சமூக வலைத்தளங்கள் மற்றும் சில இணையதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் போலியானவை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கல்கிஸ்சை பொலிஸ் அறிக்கையின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) படோவிட பொலிஸ் சோதனைச் சாவடியைச் சேர்ந்த உப-பொலிஸ் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், 10.150 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் படோவிட பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்தனர்.

மருத்துவப் பரிசோதனை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், களுபோவில போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் (JMO) முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன்போது , தம்மைக் கைது செய்த அதிகாரிகள் தன் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேக நபர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் அவர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் திங்கட்கிழமை (08), கல்கிஸ்சை நீதவான் மருத்துவமனைக்குச் சென்று சந்தேக நபரை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
நீதவானின் விசாரணையின் போது, பொலிஸ் அதிகாரிகள் தன் மீது எந்தவித தாக்குதலும் நடத்தவில்லை என்று சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து சரிபார்க்கப்படாத தகவல்கள் இணையத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டு, போலியான செய்திகளாகப் பரப்பப்பட்டு வருவதாக பொலிஸ் சுட்டிக்காட்டியுள்ளதுடன், அத்தகைய செய்திகளில் உண்மையில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.