இலங்கைக்கு எல் நினோவால் ஆபத்து ; யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர் விடுத்துள்ள எச்சரிக்கை
எல்நினோ (El Niño) காலநிலை தாக்கம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தை நோக்கி நகர்ந்து வருவதால், பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் முகாமைத்துவத்தை முறையாகப் பின்பற்ற வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஏற்பாட்டில், எல்நினோ காலநிலை மாற்றம் தொடர்பான விசேட விழிப்புணர்வுச் செயலமர்வு இன்று (24) காலை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் முதன்மை வளவாளராகக் கலந்துகொண்ட பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, மத்திய பசுபிக் பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள எல்நினோ தாக்கம் இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்குள் பரவி வருவதால், ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என தெரிவித்தார்.
கடல் வழியாக வெப்பம் பரவும் வேகம், நிலத்தின் வழியாக பரவும் வேகத்தை விட சுமார் 16 மடங்கு அதிகம் என்பதால், இந்து சமுத்திரத்தில் ஏற்படும் வெப்ப உயர்வு சுற்றியுள்ள பிராந்தியங்களிலும் விரைவாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
இதன் விளைவாக இலங்கை மற்றும் மாலைதீவுகள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என்றும், குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடுமையான நீர்த்தட்டுப்பாடு உருவாகும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கடுமையான வறட்சி நிலவும் என்றும், அதனைத் தொடர்ந்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கனமழை பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அக்டோபர் மாதத்திற்குப் பின்னரே காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகும் வாய்ப்பு காணப்படுவதால், அதுவரை அதிக வெப்பமும் வறட்சியான காலநிலையும் நீடிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
எதிர்வரும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ள பொதுமக்கள் நீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்துவதோடு, நீர்வளத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி, அமைப்பின் பிரதிநிதிகள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.