பிரித்தானியாவில் புகலிடம் கோரிய ஈழத்தமிழ் இளைஞன் உயிர்மாய்ப்பு
பிரித்தானியாவில் புகலிடம் கோரிய நிலையில், மூன்றாம் நாடான எஸ்வாதினிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
36 வயதான குறித்த இளைஞர், அதிகாரிகளால் ‘KP’ என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு டியாகோ கார்சியா தீவுக்கு அருகில் படகு மூலம் பயணித்தபோது மீட்கப்பட்ட அவர், பின்னர் சுமார் ஐந்து ஆண்டுகளாக பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேச நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அவருக்கு சர்வதேச பாதுகாப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும், பிரித்தானியாவிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படாமல், பல்வேறு நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தடுப்பு முகாமில் ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் அவருக்கு பிரித்தானியா செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் மாலத்தீவுக்கு மாற்றப்பட்ட அவர், அங்கிருந்து எஸ்வாதினியில் குடியேற்றும் நோக்கில் பிரித்தானிய அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 13ஆம் திகதி எஸ்வாதினி தலைநகரில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் குறித்த இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய அரசாங்கத்தினால் சர்வதேச பாதுகாப்பு அங்கீகாரம் வழங்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் மூன்றாம் நாட்டுக்கு அனுப்பப்பட்ட பின்னர் உயிரிழந்த முதல் சம்பவமாக இது இருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞர் தனது சொந்த நாட்டில் சித்திரவதைக்கு உள்ளானவர் என்றும், சுமார் ஐந்து ஆண்டுகள் தடுப்புக்காவலில் இருந்த நிலையில் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் எஸ்வாதினி பொலிஸாரும் பிரித்தானிய அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.