டீசல் கசிவைக் கட்டுப்படுத்த கடலோரப் பாதுகாப்பு திணைக்களம் துரித நடவடிக்கை
கொழும்பு முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் ஏற்பட்ட திடீர் டீசல் எண்ணெய்க் கசிவை விரைவாகக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று (21.11.2026) கொழும்புத் துறைமுகத்தின் ஜெயா கொள்கலன் முனையத்திற்குச் சொந்தமான புளூமெண்டல் பகுதியில் அமைந்துள்ள களஞ்சியத் தொட்டியின் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பே இந்த டீசல் கசிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

கசிவு முகாமை
இவ்வாறு கசிந்த டீசல் எண்ணெய் அப்பகுதியின் பிரதான வடிகால் கால்வாய் வழியாகப் பாய்ந்து முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் கடலில் கலந்துள்ளது.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் துரிதமாகச் செயற்பட்ட கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் எண்ணெய்க் கசிவு முகாமைத்துவக் குழு டீசல் எண்ணெய் கடலில் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக கால்வாய் கடலில் இணையும் இடத்தில் விசேட கட்டுப்பாட்டுத் தடுப்பொன்றை அமைக்க நடவடிக்கை எடுத்தது.
இதேவேளை கரையோரத்திற்கு அடித்து வரப்பட்டிருந்த டீசலை அகற்றும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு கசிந்த எண்ணெயை முற்றிலுமாக அகற்றி நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடலோரப் பாதுகாப்புப் படையின் எண்ணெய்க் கசிவு முகாமைத்துவக் குழுக்கள் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.